ஐரோப்பிய தலைவர்கள் நேற்றில் இருந்து உறங்காமலே கண் விழித்திருக்கிறார்கள். இன்று ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை சரிவு அவர்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளதாக டென்மார்க் நோர்டியா நிதிப்பிரிவு தொடர்பாளர் கொன்றிக் டுய்சபோ சற்று முன் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தில் யாதொரு பாதிப்பும் ஏற்படாது என்று நேற்று பிராணப் முகர்ஜி கூறியிருந்தார். ஆனால் இன்று மும்பாய் பங்குச்சந்தை 3.0 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அது மட்டுமல்ல தென்கொரியாவில் 6.3 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சீனாவின் ஷங்காய் பங்குச் சந்தை 5 வீத வீழ்ச்சி கண்டுள்ளது. டோக்கியோவில் 2.4 வீத வீழ்ச்சி, டென்மார்க்கில் 3.7 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவை எதிர் பார்த்ததைவிட பெரிய பாதிப்பாகும்.
சற்று முன்னர் கருத்துரைத்த டென்மார்க் நிதியமைச்சர் சர்வதேச பொருளாதார வீழ்ச்சி டென்மார்க்கை பாதித்துள்ளது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஏதாவது புதிய வழியைத்தான் காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இன்று அதிகாலை மிதிவண்டிச் சவாரி செய்துகொண்டிருக்கும்போது கருத்துரைத்த டேனிஸ் பிரதமர் நாம் சிறிய நாடு நமது வீட்டை நாம் காப்பாற்றியுள்ளோம் என்று கூறினார். ஆனால் இது இவருடைய கருத்தல்ல, நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் கெல தொனிங் சிமித் நாம் சர்வதேசம் காடு, மலை என்று கூச்சலிட வேண்டிய அவசியமில்லை. முதலில் நமது சிறிய குருவிக்கூட்டு பொருளாதாரத்தை இந்த புயலில் இருந்து காப்பாற்றுவதே முக்கியம் என்று கூறியிருந்தார். மக்கள் மன்றில் அந்தக் கருத்து எடுபட்டிருந்தது. இன்று அதே கருத்தை ஈயடிச்சான் கொப்பிபோல டேனிஸ் பிரதமர் களவாடியிருக்கிறார். அவர் தன்னளவில் யாதொரு புதிய ஞானத்தையும் பெற்றதாகக் கூற முடியவில்லை. பணத்தை திருட முடியாது கருத்தைத் திருட ஆரம்பித்திருக்கிறார்.
மறுபுறம் நேற்று இரவிரவாக ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கியான ஈ.சி.பியின் முகவர்கள் தொடர் பேச்சுக்களை நடாத்தியிருந்தார்கள். மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள இத்தாலி, ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளும் பலத்த அடி வாங்கப் போவது நிதர்சனமாக தெரிந்தது. ஆகவே இந்த நாடுகளின் பெறுமதிப் பத்திரங்களான உறுதிகளை வாங்கி பண நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ஐரோப்பிய ஒன்றிய மத்தியவங்கி அவசர முடிவு செய்துள்ளது.
இதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தின் இதர நாடுகளின் பெறுமதிப் பத்திரங்களையும் ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கியே வாங்கி உதவ இருக்கிறது. இந்த உதவியை மட்டும் செய்யாவிட்டால் இன்னொரு கிரேக்கமும், இன்னொரு ஐஸ்லாந்தும் போல பல நாடுகள் இடிந்து விழும் காட்சியை நாம் காண நேர்ந்திருக்கும்.
இந்த ஆபத்தில் இருந்து ஐரோப்பாவை காப்பாற்ற இரண்டே இரண்டு நாடுகளால் மட்டுமே முடியும். ஒன்று ஜேர்மனி மற்றயது பிரான்ஸ். எனவேதான் ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலும், பிரான்சிய அதிபர் நிக்கொலாய் ஸார்கோஸியும் இன்றய நாளின் உலகின் முன் முக்கிய தலைவர்களாக பிரகாசிக்கிறார்கள். இந்த இரண்டு நாடுகளின் பொருளாதார பலம் மட்டுமே ஐரோப்பாவை காப்பாற்றும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் தம்மைக் காப்பாற்ற எடுத்துள்ள முடிவு சீனா, இந்தியா போன்ற நாடுகளுடைய பொருளாதாரத்திற்கு எதிரான முடிவே என்பதை அவதானிக்க வேண்டும். கடன் பத்திர பெறுமதி இறக்கம் செய்து மேலை நாடுகள் தம்மை பாதுகாக்க முடிவு செய்தது ஒரு நிகழ்வு. ஆனால் மேலை நாடுகள் தம்மை சுயநலமாக பாதுகாத்துக் கொள்ள, மறுபுறம் உலகப் பொருளாதாரம் பாரிய கொலகொலப்பை சந்தித்துள்ளது. உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேலை நாடுகள் கடுகளவும் சிந்திக்க மறந்துவிட்டார்கள் என்று சீனா சீறிப்பாய்ந்துள்ளது. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறல்லவா..
இன்று ஏற்பட்டுள்ள பங்குச்சந்தை வீழ்ச்சி, உலகப் பொருளாதார நெருக்கடி போன்றன பாரிய வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தும். வீட்டு விலைகள் சட்டென வீழ்ச்சியடையும். அதேவேளை எரிபொருள் விலை குறையும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. டபிள் டிப் என்னும் பொருளியல் பாதாளம் கெயின்சின் என்வலப் கோட்பாடு போல பாதாளத்தில் சரிய ஆரம்பித்திருக்கிறது. அது டபிள் டிப் எல்ல பல டிப்களாக விழப்போகிறது. அது மீண்டெழ முடியுமா இல்லை மூன்றாவது உலகப் போர் தேவையா என்பதை காலமே தீர்மானிக்க வேண்டும்.
அலைகள் உலகம் மீதான நோக்குதல் 08.08.2011
No comments:
Post a Comment